அ.தி.மு.க.இளைஞரணி சார்பில் தி.மு.க.அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நெல்லை புறநகர் மாவட்டம் முழுவதும் 108 தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக மாவட்ட செயலாளர் ராஜாP.செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-தமிழகம் முழுவதும் மின்வெட்டு காரணமாக மக்கள் பெரும் பாதிப்படைந்து வரும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் மின்வெட்டு காரணமாக தொழில் வளங்கள் கடுமையாக நசுக்கப்பட்டு வருகின்றன. விசைத்தறி தொழிலாளர்கள், நூற்பாலைகள் போன்றவை எல்லாம் முடங்கி கிடக்கும் சூழ்நிலை காணப்பட்டு வருகிறது. மேலும் கடுமையான மின்தடை காரணமாக விவசாய பணிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளன.கடுமையான மின்சார தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் மின்தடை காரணமாக குடிநீர் பிரச்னையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது.
தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டத்தினாலான பயன்பாட்டினை மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முறையாக பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தி.மு.க.அரசின் மக்கள் விரோத போக்கினை கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம் நடத்திட மாண்புமிகு அம்மா அவர்களின் ஆணைபடி நெல்லை புறநகர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும் 108 தெருமுனை பிரசார பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது.அ.தி.மு.க. இளைஞரணி சார்பில் நடத்தப்படும் தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் வரும் 18ம் தேதி சங்கரன்கோவிலில் மாலை 4 மணிக்கு துவங்கப்படுகிறது.
முதற்கட்டமாக 59 தெருமுனை பிரசார பொதுக்கூட்டங்களும், அதற்கடுத்தப்படியாக எஞ்சியுள்ள தெருமுனை பிரசார பொதுக்கூட்டங்களும் இளைஞரணி சார்பில் நடத்தப்படுகிறது.மேலும் நெல்லை புறநகர் மாவட்டத்திற்கு வரும் 13ம் தேதி மாநில இளைஞரணி செயலாளர் ஆதிராஜாராம் வருகை தருகிறார். சங்கரன்கோவில் இளைஞரணி சார்பில் நடத்தக்கூடிய நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.தெருமுனை பிரசார பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி செயலாளர் சவுக்கை வெங்கடேசன் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள், புறநகர் மாவட்ட அ.தி.மு.க.நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment